இயற்கையின் பிரம்மாண்டத்தோடு தனி மனித விடுதலையையும் இணைத்துப் பின்னப்பட்டிருக்கும் இந்நாவல், தமிழில் இதுவரை பேசப்பட்டிராத நிலங்களையும் மனிதர்களையும் அவர்களின் தனித்துவமான சிக்கல்களையும் காட்சிப்படுத்த முன் வந்திருக்கிறது.
ஜவ்வாது மலைத் தொடரும், திருவண்ணாமலையும் வசீகரமான கதாபாத்திரங்களாக உருமாறியிருக்கும் இந்நாவலில் வெயிலும் மழையும் ஊடுபாவி வடதமிழகத்தின் இன்னொரு முகத்தை அறியத் தருகின்றது.
ஹிப்பிகளும், விளிம்பு நிலை மனிதர்களும் சேர்ந்து உருவாக்கும் இக்கதைவெளியெங்கும் கஞ்சா நெடி விரவிக் கிடக்கிறது. ஒரு புள்ளியில் நிலைபெறாத நாடோடி மனங்களில் உள்ள காமமும், போதையும், கைவிடப்பட்ட அன்பும், கொண்டாட்டமும் வாசிப்போரைக் கனவுத் தன்மைக்குள் தள்ளுகிறது.
அய்யனார் விஸ்வநாத்தின் தனித்துவமான மொழியும் பின் நவீனத்துவக் கதை கூறலும் இந்நாவலின் அலாதியான வாசிப்பின்பத்திற்கு வலு சேர்க்கின்றன.
மாரியோ பர்கஸ் யோசாவைப் படிக்கும் போதெல்லாம் இந்த அளவு சுவாரசியமாகக் கதை சொல்ல தமிழில் யாருமே இல்லையே என்று வருத்தப்படுவேன். இங்கே இலக்கியம் என்றாலே ‘டல்’லாக இருக்க வேண்டும் என்று ஒரு தவறான எண்ணம் இருந்து வருகிறது. அய்யனார் விஸ்வநாத்தைப் படித்த போது அந்த என் எண்ணம் மாறி விட்டது. பிரமாதமான கதைசொல்லி. அதே சமயம் Content-உம் பல உள்ளடுக்குகளைக் கொண்டதாக இருக்கிறது. அய்யனார் வெறும் கதைசொல்லி மட்டும் அல்ல. மீண்டும் மீண்டும் வாசிக்கக் கோருபவை அவர் நாவல்கள். அந்தத் தன்மைதான் பொழுதுபோக்குக் கதைகளுக்கும் இலக்கியத்துக்குமான வித்தியாசம். அய்யனார் விஸ்வநாத்தின் ஹிப்பி நாவலைப் படித்து விட்டேன். அற்புதம். எடுத்தால் கீழே வைக்க முடியாது. நல்லவேளை, அய்யனார் ஏற்கனவே வெளிநாட்டில் இருக்கிறார். இல்லாவிட்டால் கதையின் முடிவுக்காக அவரை நாடு கடத்தியிருப்பார்கள். மிரட்டும் நாவல். இதை உடனடியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும்.
Author: Ayyanar Viswanath
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
Language: Tamil
Delivery: 3-7 days